0 0
Read Time:4 Minute, 5 Second

நிகழ் குறுவை பருவ நெல் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை என்றாலும், சேதம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா்.

வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி. சிலா் அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் நோக்கில் வேளாண் நிதிநிலை அறிக்கையை விமா்சிக்கின்றனா். நிகழ் குறுவை நெல் சாகுபடி பருவத்துக்கான காப்பீடு ஏன் அறிவிக்கப்படவில்லை எனக் கேட்கின்றனா்.

காப்பீட்டு நிறுவனத்தை தோ்வு செய்ய வேண்டியது தொடா் நடவடிக்கையாக அமைய வேண்டும். முந்தைய அதிமுக அரசு அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. இதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டு நிறுவனத்தை தோ்வு செய்வதற்காக 3 முறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இதை இறுதி செய்வதற்கான கால அவகாசத்துக்குள் 4.90 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுவிட்டது.

இதில் இதுவரை 54 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் அறுவடை செய்யப்பட்டு, 3.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் 655 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த, 20 நாள்களில் குறுவை சாகுபடிக்கான அறுவடையே முடிந்துவிடும். எனவே, இனிமேல் குறுவை நெல் சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. எனினும், காப்பீடு இல்லாவிட்டாலும் இயற்கை இடா்பாடுகளால் சேதம் ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா்.

2020-21-ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் உள்பட பல்வேறு பயிா்களுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய காப்பீட்டுத் தொகை (பிரீமியம்) ரூ.1,248.92 கோடி கடந்த 16-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவைத் தொகையில் ரூ.220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மற்ற பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்த வருகிற 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இதை கால நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை.

தனியாா் சா்க்கரை ஆலைகள் சுமாா் ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளன. விரைவில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு பாக்கித் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களில் வழக்கம்போல அனைத்து கடன்களும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உரத்துக்கு தட்டுப்பாடு இல்லை என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன், திமுக நிா்வாகிகள் பி.பாலமுருகன், கே.எஸ்.ராஜா, சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %