0 0
Read Time:4 Minute, 10 Second

நெய்வேலி அருகே கடத்தப்பட்ட லாரியை மீட்க சென்ற உரிமையாளர், டிரைவர் சிறைவைக்கப்பட்டனர். ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் வீணங்கேணியில் அரசுக்கு சொந்தமான நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு விருத்தாசலம் வடக்குக்கோட்டை வீதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 52) என்பவர் தனக்கு சொந்தமான லாரியில் நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார்.  வீணங்கேணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அறிவழகன், தாமோதரன் ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரியை ஓட்டிச்சென்ற மனோகரனை கீழே இறக்கி தாக்கியதாக தெரிகிறது.

மேலும் அவரிடம் இருந்த செல்போன், கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. லாரி அங்கேயே நின்றது. இதற்கிடையில் தாக்குதலில் காயமடைந்த மனோகரன் வடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் மறுநாள் அதிகாலையில் மனோகரன், லாரி டிரைவர் வீராசாமியுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது லாரியை தரமுடியாது எனக் கூறி அங்கிருந்த அறிவழகன், தாமோதரன் ஆகியோர் கூறினர்.

பின்னர் அங்கிருந்த லாரியை கடத்திக்கொண்டு வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பின்புறம் நிறுத்திவிட்டனர். லாரியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற மனோகரன், வீராசாமி ஆகிய 2 பேரையும் அறிவழகன், தாமோதரன், அவரது நண்பர்கள் பிரபு, ஜெயபால், வெங்கடேசன், செந்தில் ஆகியோர் சிறை வைத்துக்கொண்டு ரூ.2 லட்சம் தந்தால் தான் இங்கிருந்து நீங்கள் செல்ல முடியும் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன மனோகரன் தனது மனைவியிடம் செல்போனில் பேசி, நடந்த விவரத்தை தெரிவித்தார். அதன்படி அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி, ரூ.2 லட்சத்தை வாங்கி, மனோகரன் நண்பர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினாராம்.

அதை அவர் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த அறிவழகன், தாமோதரன் தரப்பினரிடம் கொடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டுள்ளார். இதற்கிடையில் தாக்குதலில் காயமடைந்த மனோகரனுக்கு உடல் நிலை மோசமானது. அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி அவரது மனைவி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %