மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய- மாநில அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக மக்கள் அதிகம் கூடும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக மக்களின் முக்கிய பொழுது போக்கு இடமாக உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர்களை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திேயட்டர் உரிமையாளர்கள் வருமான இழப்ைப சந்தித்தனர்.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து வருவதால் தியேட்டர்களை 50 சதவீத ரசிகர்களுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் நேற்று தியேட்டர்கள் திறக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மயிலாடுதுறை நகரில் உள்ள 4 தியேட்டர்கள் மற்றும் சீர்காழி பகுதியில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. சீர்காழியில் 3 தியேட்டர்கள் உள்ளன. ஆனால் மூன்று தியேட்டர்களும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது.
நேற்று தியேட்டர்கள் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றனர். ஆனால் தியேட்டர்கள் பூட்டி கிடைத்ததைக் கண்டு ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். மயிலாடுதுறை பகுதியில் உள்ள தியேட்டர்களில் நேற்று முன்தினம் பராமரிப்பு பணி நடைபெற்றது. இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:- தியேட்டரை செயல்படுத்த பராமரிப்பு பணி முக்கியம். பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவே அதிக நாட்கள் ஆகும். ஏராளமான பணம் செலவாகும். இருப்பினும் போதிய அளவு ரசிகர்கள் தியேட்டரில் வந்து படம் பார்ப்பார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.