0 0
Read Time:5 Minute, 35 Second

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரைவான நகரமயமாக்கல், கடலோர சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் கடலோர சமூகங்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் கடலோர மண்டலங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை ஒருவித அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றன.

மேலும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வு தொடர்ந்து அதிகரிப்பதால், இப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்து வருகிறது.இதுகுறித்து அனைத்து மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதன்மை விஞ்ஞானி வேல்விழி கூறியதாவது:-கடல் மட்டம் உயர்வுக்கான பாதுகாப்பு வகைகளில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சதுப்பு நிலங்களில் காணப்படும் மாங்குரோவ் காடுகள் உள்நாட்டில், கடல் நீர் நுழைவதை தடுக்கும் மாபெரும் அரணாக உள்ளது. மேலும் இந்த சதுப்பு நிலங்கள் கடல் மட்டம் உயர்வுக்கு எதிரான முதல் வரிசையாக செயல்படுவதை தெளிவாக குறிக்கிறது.

சதுப்புநில, ஈரநிலத்தில் மீன், இறால் மற்றும் நண்டுகள் போன்ற உயிரியல் வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இவைகள் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வாழ்வாதார பாதுகாப்பை வழங்குகிறது. மீன் உற்பத்தியில் சதுப்பு நிலங்களின் பங்கு மிக முக்கியமானது. மீன், இறால் மற்றும் நண்டுகளுக்கான உற்பத்தி மைதானங்களாக விளங்கும் இவற்றின் பங்கு பெரிதும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, கடலோர மீனவ குடும்பங்களின் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சதுப்பு நிலங்களின் வளங்களை அதிகரிக்க அவசர தேவை உள்ளது.

அதனால் சதுப்பு நிலங்களை பராமரிப்பது, பொருத்தமான பகுதிகளில் அதை உருவாக்குதல் மற்றும் அதன் மீன்வளத்தை அதிகரிப்பது ஆகியவற்றின் ஒரு பகுதியாக, புதிய நிலையான உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தி உவர்நில பகுதிகளில் நில பயன்பாட்டு முறையை மாற்றுவதன் மூலம் உள்ளூர் சமூகத்தின் திறனை மேம்படுத்த முடியும்.அத்தகைய ஒரு அமைப்பானது தான், ஒருங்கிணைந்த மாங்குரோவ் மீன்வளர்ப்பு பண்ணை அமைப்பாகும். இது ஒரு புதிய வகையான விவசாய முறையாகும்.இதில் மாங்குரோவ் காடுகளை வளர்ப்பதற்காக சுமார் 30 சதவீதம் பரப்பளவையும், மீன் வளர்ப்பிற்கு 70 சதவீதம் நீர் பரப்பளவையும் வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றன.

சதுப்பு நிலங்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்ப்பதற்கான இடம், குளத்திற்குள் மேடுகளை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அடர்த்தியான சதுப்புநில மரங்கள் இருப்பது கடல் மட்டம் உயர்வு தாக்கத்தை தணிக்கும். அதே நேரத்தில் மீன்களின் தொடர்ச்சியான அறுவடை, கடலோர சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.உள்ளூர் மீன்பிடி சமூகங்களின் ஆதரவுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF) பல்வேறு இடங்களில் இந்த மாதிரியை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது கடல் மட்டம் உயர்வின் விளைவை குறைக்கவும், சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடலூர் மாவட்டம் முடசல் ஓடை கிராமத்தில் ஒருங்கிணைந்த சதுப்புநில மீன் வளர்ப்பு முறை திட்டத்தை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக 2.10 ஹெக்டேர் பரப்பளவு நிறுவப்பட்டுள்ளது.இத்திட்டம் தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியால் (நபார்டு) ஆதரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாரம்பரிய மீனவர்கள் மற்றும் இருளர் சமூக மீனவர்கள் அதிகளவில் பயன்பெறுகின்றனர். இதற்கிடையே முடசல் ஓடை கிராமத்தில் ஒருங்கிணைந்த சதுப்புநில மீன் வளர்ப்பு முறை திட்டத்தை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %