“கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆற்றுநீர் உப்புநீர் கலப்பில்லாமல் நல்ல நீராக இருந்து வந்தது. அப்போதெல்லாம் நீர்க்காகங்களைக் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் காண்பது மிகவும் அரிது.”
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் சந்தப்படுகை, திட்டுபடுகை, நாதல்படுகை, அளக்குடி, முதலைமேடு, குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
கடந்த மூன்று வருடங்களாக இந்த சீசனில் தினந்தோறும் இரை தேட நீர்க்காகங்கள் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகப் பகுதிகளுக்கு வருகின்றன. இவை தினந்தோறும் பகல் பொழுதில் கூட்டமாக வந்து தண்ணீருக்குள் மூழ்கி மீன், நத்தை, இறால் போன்ற உணவுகளை இரையாக்கிக் கொள்கின்றன. பின்னர் மணல்திட்டாக உள்ள இடத்திலும், ஆற்றங்கரையோரம் உள்ள மரக்கிளைகளிலும் கூட்டமாக சென்று அமர்ந்து ஓய்வெடுத்தபின் கலைந்து செல்கின்றன.
ஆனால் கடந்த பத்து வருட காலத்தில் கடல்நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை புகுந்து ஆற்று நீரை உப்பு நீராக மாற்றிவிட்டது. இந்த உப்பு நீர் ஆற்றில் எவ்வளவு தூரத்திற்கு புகுந்துள்ளதோ அந்தளவு தூரத்திற்கு நீர்க்காகங்கள் தினந்தோறும் வந்து, நீரில் மூழ்கி இரை தேடுகின்றன.
கொள்ளிடம் ஆற்றங்கரைப் பகுதிகளில் நீர்க்காகங்களுக்கு தங்குமிடமோ, இனப்பெருக்கம் செய்யும் இடமோ இல்லை என்பதால், அவை ஒவ்வொரு நாளும் மாலையில் வெளியூர் சென்று மறுநாள் வருகின்றன. என்றாலும் எங்கள் கிராமத்தை நாடி கூட்டம் கூட்டமாக வரும் அந்தக் காகங்களைக் கண்டு மக்கள் ரசிக்கின்றனர்” என்றார்கள்.