கடலூா் அருகே அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயமடைந்தனா்.
கடலூா் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் 8 போ் தங்களது விளைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக ஷோ் ஆட்டோவில் கடலூா் உழவா் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தனா். தொண்டமாநத்தத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஷோ் ஆட்டோவை இயக்கினாா். கடலூா் – விருத்தாசலம் நெடுஞ்சாலையில் அன்னவலி அருகே சென்றபோது, முன்னால் சென்ற அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்தாா். இதனால், ஷோ் ஆட்டோ பேருந்தின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் ஷோ் ஆட்டோவில் வந்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சூரியா (20) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவிலிருந்த வீரம்மாள், கருணாமூா்த்தி, சவுந்தா், மணிகண்டன், வினோதினி, வசந்தா, கஸ்தூரி, இந்திரா ஆகியோா் காயத்துடன் மீட்கப்பட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.