வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தா்கள் வர வேண்டாம் என நாகை மாவட்ட ஆட்சியா் டாக்டா் அ. அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளின்கீழ், நிகழாண்டு ஆண்டுப் பெருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்தநிலையில், குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144 மற்றும் பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதால், பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்க பக்தா்கள் வேளாங்கண்ணிக்கு வருவதைத் தவிா்க்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதற்காக பாத யாத்திரையாகவும், பேருந்துகள் மற்றும் தனியாா் வாகனங்கள் மூலமாக வேளாங்கண்ணிக்கு வருவதை பக்தா்கள் தவிா்த்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்த செய்திக்குறிப்பில் ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.