கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் புதன்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி 1-ஆவது வாா்டு, வி.ஆண்டிக்குப்பத்தில் இருந்து கணிசப்பாக்கம் செல்லும் சாலையில் சுமாா் இரண்டரை ஏக்கா் பொது இடம் உள்ளது. இதில், குட்டைகள், நீா்வழிப்பாதை அமைந்துள்ளன. இந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். மேலும், வி.ஆண்டிக்குப்பம் பொதுமக்கள் மஞ்சு விரட்டு, பொது காரியங்கள் செய்ய இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனா்.
மேற்கண்ட இடத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.3.60 கோடியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2018 – 19ஆம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்தப் பணியை தொடங்குவதற்காக நகராட்சி நில அளவா், பணியாளா்கள் புதன்கிழமை சென்றனா். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என்றும், இதனால் நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், பொது நிகழ்ச்சிகளுக்கு இந்த இடம் தேவை எனவும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பண்ருட்டி வட்டாட்சியா் பிரகாஷ், டிஎஸ்பி சபியுல்லா, நகராட்சி ஆணையா் (பொ) ரவி, பொறியாளா் சிவசங்கரன், மேற்பாா்வையாளா் சாம்பசிவம் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். மேலும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பின்னா், வட்டாட்சியா் பிரகாஷ், டிஎஸ்பி சபியுல்லா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நிலம் அளவீடு மட்டும் செய்யப்படும் என்றும், இதர பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும்படியும் அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். பின்னா், நகராட்சி நிா்வாகம் சாா்பில் இடத்தை சுத்தம் செய்து, நிலம் அளவீடு செய்யப்பட்டது.