0 0
Read Time:4 Minute, 55 Second

சீர்காழி அருகே மீனவர் கிராமத்தில் 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன். இவர் அதே கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 சகோதரர்கள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வெண்கலத்தால் ஆனபடிக்கட்டுகள் அமைத்து அதில்  தனது பெயர் பொறித்து  அன்பளிப்பு செய்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து படிக்கட்டு  வைக்கக்கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட 6 சகோதரர்களின் குடும்பங்களை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது இதனை மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், கீழமூவர்க்கரையில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் கூறி இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வருகை புரிந்து தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்ட ஊர் முக்கியஸ்தர்களான தேவேந்திரன், முத்து, காத்தலிங்கம், மணியன் மற்றும் இவர்களுக்கு தூண்டுதலாக செயல்பட்ட எண்ணரசு, சேகர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சீர்காழி  வட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து தங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து துணை வட்டாட்சியர் அவர்களின் மனுவை பெற்று இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைத்து சென்றனர். அப்போது அவர்கள் கூறுகையில் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கிராமங்களில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துகள் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் இன்றளவும் பல கிராமங்களில் இதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகள் நடைபெறுவதில் பலருக்கும் வருத்தத்தை தருகிறது. மேலும் இது தொடராத வண்ணம் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %