சிதம்பரம் நகராட்சியில் மையப்பகுதியாக தில்லை அம்மன் நகர், ஜோதி நகர், நாகஜோதி நகர் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், தில்லையம்மன் நகரில் ஒரு காலி இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்தது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எதிர்ப்பையும் மீறி அங்கு நேற்று செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை நேற்று தொடங்கினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சென்று, பணியை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் பணிகளை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.