உற்பத்திப் பொறியியல் படிப்பின் மகத்துவமும் உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் துறையின் தலைவர் வி.பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் ஆன்லைன் வெபினார் 25.08.2021 மாலை நடைபெற்றது. இந்த வெபினாரை உற்பத்தி பொறியியல் மாணவர் சங்கம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி, அண்ணாமலை நகர் மைய்யம் மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) உற்பத்தி பொறியியல் மாணவர்கள் அத்தியாயம் ஆகிய மூன்று அமைப்பும் இணைந்து நடத்தியது. துறைத்தலைவர் முனைவர் வி.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். அவர் தனது தலைமையுரையில் உற்பத்திப் பொறியியல் துறையில் பயின்று இந்தியா மட்டுமன்றி பல அயல் நாடுகளில் நமது முன்னாள் மாணவர்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்து நமது பல்கலைக்கழகத்திற்கு முன்னுதாரணமாய் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் 1985-1989 ஆம் ஆண்டு உற்பத்தி பொறியியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர் சிங்கப்பூர், பிளக்ஸ் ஸ்பீடு டெக்னாலஜி இயக்குனர், பால நாகேந்திர ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலகெங்கிலுமுள்ள உற்பத்தி துறையில் குவிந்து கிடக்கும் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தனது உரையில் எண்ணை மற்றும் குழாய் உற்பத்தி, சுரங்கத்துறை, கப்பல் கட்டுமானத்துறை, பாதுகாப்பு உதிரிபாகங்கள் உற்பத்திதுறை, உயிர் மருத்துவத்துறை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறை போன்றவற்றில் உற்பத்தி பொறியியல் பயிலும் மாணவர்கள் எவ்வாறெல்லாம் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் அதற்கு தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு நன்கு பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100 கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
உற்பத்திப் பொறியியல் துறை மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.ரவிசங்கர் வரவேற்புரை வழங்கினார். இந்தியன் வெல்டிங் சொசைட்டி தலைவர் முனைவர் க.சண்முகம் சிறப்பு விருந்தினரை வரவேற்றார். இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியரிங் உற்பத்திப் பொறியியல் துறை மாணவர்கள் அத்தியாயம் ஆலோசகர் முனைவர் ச.ராஜகுமார் நன்றியுரை வழங்கினார். நாட்டு நலப்பணி திட்டம் அலகுஎன் 6–ன் திட்ட அலுவலர் முனைவர் ப.சிவராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.