காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் கூறினார்.
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். டிக்கெட் கவுண்டர், குட்ஷெட்பகுதி, பயணிகள் ஓய்வு அறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வால் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் அகல ரெயில் பாதை பணிகள், விரைவில் முடிக்கப்பட்டு இன்னும் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி கோட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 22 ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் படிப்படியாக இயக்கப்படும். மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே ரெயில்வே வழித்தடம் மீண்டும் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வாலிடம் மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி., மயிலாடுதுறை, சீர்காழி வணிகர் சங்க பொறுப்பாளர்கள், சேவை அமைப்பினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து கோவை, மைசூர், சென்னை செல்லும் ரெயில்கள் அனைத்தும் 4, 5-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்படுவதால் வயதான பயணிகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும். பேட்டரி கார் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் நலன் கருதி மயிலாடுதுறை-திருச்சி, விழுப்புரம் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், சீர்காழி ரெயில் நிலையத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் உள்பட 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பது இல்லை. எனவே அனைத்து ரெயில்களையும் சீர்காழி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.