0 0
Read Time:3 Minute, 42 Second

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாகனத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியப்பட்டு அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 46). தொழிலாளி. இவருடைய மனைவி ஆரியமாலா(42). இவர்கள் இருவரும் நேற்று குடிகாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றனர். 

பின்னர் அங்கிருந்து இருவரும் மாலை 5 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்திற்கு புறப்பட்டனர். பெரியப்பட்டு பரவனாறு அருகே சென்றபோது புதுச்சத்திரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த வேனின் முன்பக்க டயர் வெடித்து, சாலையில் தறிகெட்டு ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அந்த வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இதில் ராஜமாணிக்கம், ஆரியமாலா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நிகழ்ந்ததும் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள், விபத்துக்கு காரணமான டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி சிதம்பரம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுட்டனர். அப்போது ஆத்திரமடைந்த சிலர் விபத்து ஏற்படுத்திய வேனை அடித்து நொறுக்கினர். இதில் வேனின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது போலீசார், உங்களது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து விபத்தில் பலியான தம்பதியின் உடல்களை புதுச்சத்திரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %