கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் மகன் ஜானி (வயது 41), இவர் தனக்கு சொந்தமான டாரஸ் லாரியில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
வேப்பூர்-சேலம் சாலையில் கூட்டுரோடு அருகே வந்த போது, அங்கிருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ்காரர் பாரதிமோகன் ஆகியோர் லாரியை மறித்தனர்.
பின்னர், அந்த லாரியை சோதனை செய்த போது, விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர். அபராத தொகையை கட்டிவிட்டு, அங்கிருந்து லாரியை எடுத்து சென்ற ஜானி, சற்று தூரம் சென்று கூட்டுரோடு நான்குமுனை சந்திப்பில் நடுரோட்டில் லாரியை நிறுத்தினார்.
பின்னர் கீழே இறங்கிய அவர், தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக் குளிக்க முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கு எதிராக அவர் கோஷமிட்டார். இதுபற்றி அறிந்த வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிசந்திரன், சந்திரா, தலைமை காவலர்கள் சதீஷ், ராஜீ, ஆகியோர்சம்பவ இடத்திற்கு வந்து லாரியை அப்புறப்படுத்தி ஜானியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே தீக்குளிக்க முயன்றதாக கூறி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜானியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.