கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து கரோனா பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. கரோனா ஊரடங்கு முடிந்து 2021-ஆம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்கள் மீண்டும் இயங்கின. மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் மீண்டும் கரோனா பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 3 மாத காலமாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 1-ஆம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் கடலூரில் நேற்று அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனிடையே நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியைகள் பாடம் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப் பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது. பள்ளி தூய்மை செய்யும் பணிகளும் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் 3 நாளில் 3 ஆசிரியைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிகழ்வு மாணவ- மாணவிகளிடையேயும், பெற்றோர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.