மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் உரிமை என கூறியுள்ளது.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் பேராதரவு இருந்தது. ஆனால் ஒருசில தரப்பிடம் எதிர்ப்பு இருந்தது .
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தமிழில் அர்ச்சனை செய்ய சட்டப்படி உரிமை உள்ளதா என அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் அர்ச்சனை செய்ய தடை கோரி வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது.
குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வரவேற்கிறது.
நம் தாய்மொழியாம் தமிழில் அர்ச்சனை செய்யும் போது அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொண்டு நாம் கேட்கும் பொழுது நம்முடைய மனது நிறைவாக இருக்கும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். இதை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை வரவேற்று பாராட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.