கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டினார். வடலூர் அடுத்த வீணங்கேணி பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்ற போது, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் பஸ்சில் ஏறினார். தொடர்ந்து அவர் பயணிகளிடம் பயணச்சீட்டு பெற்று உள்ளார்களா? என சோதனை செய்தார்.
மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த போது, பஸ்சில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து இறங்கி அருகில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் பின்புறம் வீசி விட்டு தப்பி ஓடினார். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல் வீசியவர் யார்? கல் வீசியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.