0 0
Read Time:3 Minute, 41 Second

நாகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் தேவியருடன் நடுக்கடலில் எழுந்தருளி காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நாகை கடலில் தங்கமீன் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது கொண்ட பக்தியினால், கடலில் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு நாளும் வலையில் சிக்கும் முதல் மீனை, சிவபெருமானை நினைத்து கடலில் விட்டு விடுவது வழக்கம். அவரது நாயனாரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான், சில நாட்கள் வலையில் மீன்கள் சிக்காமல் இருக்கச் செய்தார். இதனால், நாயனாரின் குடும்பம் வறுமையில் வாடியது. சில நாட்கள் கழித்து, அதிபத்த நாயனாரின் வலையில் நாள்தோறும் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி சிவபெருமான் திருவிளையாடல் செய்துள்ளார்.

வறுமையில் வாடிய நிலையிலும் வலையில் சிக்கும் முதல் மீனான ஒரே ஒரு மீனையும், இறைவனை நினைத்து மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.குடும்பத்தினர் வயிற்றுக்கு உணவில்லாமல் வறுமையில் வாடிய நிலையில், ஒருநாள் அதிபத்த நாயனாரின் வலையில் நவரத்தினங்களால் ஆன தங்கமீன் சிக்கியுள்ளது. தங்க மீனாயினும் தயங்காது இது, அருட்கூத்தாடும் எம்பெருமான் சிவனுக்கு உரியது என்று மகிழ்வோடு கடலில் விட்டுள்ளார். அதிபத்த நாயனாரின் தீவிர பக்தியை மெச்சிய சிவபெருமான், நடுக்கடலில் இடபவாகனத்தில் தேவியருடன் எழுந்தருளி காட்சியளித்தார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு, சிவபெருமான் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில், நம்பியார் நகர் மீனவர்கள் சார்பாக, கடலில் தங்க மீன்விடும் நிகழ்வு வெகு விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கொரோனா தொற்று காரணமாக, நம்பியார் நகர் கிராம கடற்கரையில் எளிமையான முறையில் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நீலாயதாட்சியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் நேற்று மாலை நம்பியார் நகர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், கோவிலில் இருந்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் விடும் நிகழ்வு நடந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %