தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (செப். 11) வெளியிட்ட அறிவிப்பு:
“குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும்.
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்):
பாபநாசம் (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), காரைக்கால் தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக் கடல் பகுதிகள்:
11.09.2021 முதல் 12.09.2021 வரை: மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
13.09.2021 முதல் 14.09.2021: வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக் கடல் பகுதிகள்
11.09.2021 முதல் 15.09.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.