தைராய்டு பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? மற்றும் தைராய்டு குணமாக எளிய வழிகள்!
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி.
இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது.
இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம்.
உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தைராய்டு பாதிப்பு வராமல் தடுக்க, சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால் தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.
தைராய்டு அறிகுறிகள் (Thyroid Symptoms in Tamil) மற்றும் தீர்வுகள்
ஹைபோதைராய்டிஸம்: (Hypothyroidism in Tamil)
இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.
அறிகுறிகள் (Hypothyroidism Symptoms in Tamil): உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.
காரணங்கள்: உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.
சிகிச்சை: மருந்துகள் மூலம் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்ய முடியும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதட்டம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 – 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்ய, இரத்தப் பரிசோதனை செய்வார். இதன் பின்பு வருடம் ஒரு தடவை இரத்தப் பரிசோதனை செய்யலாம்.
உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ, மேற்கூறிய பிற அறிகுறிகள் ஏற்பட்டாலோ, பிற மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலோ, சரிவர மருந்துகள் எடுக்கவில்லை என்றாலோ, மருந்துகள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோனின் அளவை பரிசோதிப்பது அவசியம்.
ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism in Tamil)
இது, உடலின் தேவையைவிட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில், உடலின் அனைத்து இயக்கங்களின் வேகம் அதிகரிக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாக ஆரம்பித்து முன்னேறுவதால், மன அழுத்தம் அல்லது பதட்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.
அறிகுறிகள் (Hyperthyroidism Symptoms in Tamil): பதட்டம், அதிக வியர்வை, படபடப்பு, கை நடுக்கம், தூங்குவதில் சிரமம், சருமம் மெலிதல், முடி உதிர்தல், தசைகள் ஓய்ந்து போதல் – குறிப்பாக தொடை மற்றும் தோற்பட்டை தசைகள், அடிக்கடி மலம் கழித்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருத்தல், எடை குறைதல் ஆகியவை.
காரணங்கள்: ‘கிரேவ்ஸ்’ நோய் எனப்படும் நோயால் பொதுவாக ஏற்படும். இது தவிர தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டி அல்லது முடிச்சுகளாலும், எரிவாலும், தொற்றாலும் சில வகையான மருந்துகளாலும் ஏற்படலாம்.
சிகிச்சை: மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மருந்துகள், பிற மருந்துகள் என நோயின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து நபருக்கு நபர் தைராய்டு சிகிச்சை மாறுபடும்.
தைராய்டு காய்டர்:
இது தைராய்டு சுரப்பி பெரிதாவதைக் குறிக்கும். இந்நிலையில் சுரப்பி அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது ஏதும் மாற்றமில்லாமலும் செயல்படலாம்.
காரணம்: உணவில் அயோடின் பற்றாக்குறை, ஆட்டோ இம்யூன் நோய், தைராய்டில் எரிவு போன்றவற்றால் இது ஏற்படும்.
சிகிச்சை: பெரிதான சுரப்பி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். தைராய்டு சுரப்பி கழுத்தில் பார்க்க முடிகிறதென்றால், உடனே மருத்துவரை அணுகவும்.
தைராய்டு கட்டிகள்:
தைராய்ட்டு சுரப்பியில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் ஏற்படலாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக இவை எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு கழுத்தில் வலி, விழுங்குவதில் சிரமம், மூச்சு வாங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்றவை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சென்று இது புற்றுநோய் கட்டியல்ல என்று உறுதி செய்து கொள்வது அவசியம்.
தைராய்டு எரிவு:
தைராய்டு செல்கள் எரிவுக்கு உள்ளாகும்போது அதன் வீரியத்தைப் பொறுத்து பாதிப்படையும். மருந்துகள், மகப்பேற்றுக்குப்பின் தொற்றுகள் (Infection) போன்றவை இவற்றை ஏற்படுத்தும். சிலவகையான எரிவுகள் வலியை ஏற்படுத்தும்.
இந்தப் புற்றுநோயை பெரும்பாலும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். மற்ற புற்றுநோய்கள் போன்று இது வலியோ, பாதிப்போ ஏற்படுத்துவதில்லை.
பொதுவாக இவை எந்த அறிகுறியும் ஏற்படுத்துவதில்லை.
சிலருக்கு வலி, விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரும் வாய்ப்பு அதிகம்.
மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
யாருக்கு தைராய்ட் நோய் வரும் வாய்ப்பு அதிகம்?
கீழ்க்கண்டவை இருந்தால் அவர்களுக்கு மற்றவரை விட தைராய்டு நோய் வரும் அபாயம் அதிகம்.
பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்
ஆட்டோ இம்யூன் வியாதிகள், குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்சினைகள் இருப்பது, தைராய்டு அறுவை சிகிச்சை மற்றும் கழுத்தில் கதிர்வீச்சு சிகிச்சை செய்திருப்பவர்கள்
புகைபிடித்தல், உணவில் அயோடின் குறைபாடு
கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பிறந்த ஓரிரு வருடங்களில்
கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா?
மிகுந்த அசதி, திடீரென உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ ஆவது, பதட்டம், மனச்சோர்வு, இயல்பைவிட மிகக் குறைந்த அல்லது அதிக கொலஸ்டிரால் அளவு, மலம் கழிப்பதில் பிரச்சினை, முடி உதிர்தல், சருமத்தில் மாற்றம், கழுத்துப்பகுதியில் வீக்கம், வலி அல்லது கட்டி, குரல் மாற்றம், தசை, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருத்தரித்தலில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
தைராய்டு பிரச்சினைகளுக்கு யோகா:
யோகப்பயிற்சிகள் தைராய்டின் செயல்பாட்டை மட்டுமின்றி உடலிலுள்ள எல்லா பாகங்களின் செயல்திறனையும் திறம்பட செயல்பட வைக்கிறது.
யோகப் பயிற்சிகள் சுரப்பிகளின் செயல்களைச் சீராக்குகின்றன.
இது தவிர உடலின் சக்தியை அதிகரித்து மனஅழுத்தத்தைக் குறைத்து, வளைவுத் தன்மையை அதிகரித்து தசை மற்றும் மூட்டின் இறுகுத்தன்மையை குறைப்பதால் தைராய்டு பிரச்சினையின் பாதிப்புகளை சமாளிக்க முடிகிறது.
2010 வருடத்தின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் ஈஷா யோக பயிற்சி செய்ததில், 51 சதவீதத்தினர், தங்கள் நோயில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அதில் 50 சதவீதத்தினர் மருந்தின் அளவை குறைக்க முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.