கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 4,831 போ் எழுதினா்.
மாவட்டத்தில் கடலூா், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் 11 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தோ்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. எனினும் காலை 11 மணி முதலே மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மைய நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் மெட்டல் டிடெக்டா் உள்ளிட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுதுவதற்காக 5,024 போ் விண்ணப்பித்தனா். 193 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. 4,831 போ் தோ்வை எழுதினா். இவா்களில் 471 போ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.