0 0
Read Time:5 Minute, 8 Second

மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் வீடுகள் முன்பு கருப்புக்கொடியேந்தி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 10 நாட்கள் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து, மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, இன்று (செப்டம்பர் 20) தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கண்டன போராட்டம் நடைபெறும் என்று கூட்டாக அறிவித்தனர்.

கறுப்புக்கொடி போராட்டம் அதன்படி, இன்று காலை 10 மணியளவில் தங்களின் இல்லம் முன்பு திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ள திமுக மற்றும் கூட்டணி தலைவர்கள் தங்களது கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதால், அவரவர் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தனது இல்லத்தின் முன்பாக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி ஈடுபடவுள்ளார்.

போராட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காலை (செப்-20)10.00 மணிக்குத் தலைமையகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்படும். மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. தோழர்கள் பங்கேற்கவும்” எனப் பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த 9 மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு செவி சாய்க்காததால், பாஜக ஆளும் மாநிலங்களைக் குறி வைத்து, அவர்களுக்கு எதிராகப் பரப்புரையை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த கிசான் மகா பஞ்சாயத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

27ஆம் தேதி பந்த் இந்த கூட்டத்தில், வரும் 27ஆம் ‘பாரத் பந்த்’ நடத்தவும் அனைத்து விவசாயச் சங்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் 27ம் தேதி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் பாரத் பந்த் நடைபெற உள்ளது. இந்த பந்துக்கு தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %