மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்க ஆர்வம் காட்டாததால் அரசு கொள்முதல் நிலையங்களில் தான் விற்பனை செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்திற்கு 123 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் குறுவை பருவத்திற்கு முதல்கட்டமாக ஜுலை மாதத்தில் நிரந்தர கட்டடங்கள் உள்ள கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டது. அதனையடுத்து அறுவடைக்கு ஏற்ப விவசாயிகள் கோரிக்கையை ஏற்று படிப்படியாக பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
கடந்த சம்பா பருவத்தில் இயங்கி பல கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறக்கப்படாத பகுதிகளில் நெல்மூட்டைகளை கொண்டுவந்து விவசாயிகள் அடுக்கிவைத்துகொண்டு போராட்டங்கள் நடத்திய பின்பு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழைபெய்து வருவதால் நெல்மூட்டைகள் மழையில் நினைந்து சேதமடைய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை காயவைத்து 17 சதவிகித ஈரப்பதத்திற்கு விற்பனை செய்வதற்கு கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைத்துள்ளோம். ஒரு நாளைக்கு 500 முதல் 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இதனால் நாள்கணக்கில் காத்துகிடக்க வேண்டியுள்ளது.
இயற்கையும் எங்களை விட்டுவைக்காத அளவிற்கு தினந்தோறும் மழையும் பெய்வதால் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைய தொடங்கியுள்ளது” என வேதனை தெரிவிக்கிறார்கள் அவர்கள்.
இன்றும்கூட 95மி.மீட்டர் மழைகொட்டி தீர்த்தனால் கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைக்கப்பட்ட நெல் மூட்டைகள் அதிக அளவில் நனைந்து சேதமடைந்துள்ளது. மணக்குடி கிராமத்தில் நெல்மூட்டைகளை சூழ்ந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியையும் விவசாயிகளே செய்து வருகின்றனர்.
மழையில் சேதமடைந்த நெல்லை மீண்டும் காயவைத்து விற்பனை செய்வதற்கு கூடுதல் செலவாகும் எனும்கூறும் அவர்கள், உரிய நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதலை துரிதப்படுத்தியிருந்தால் இதுபோன்ற நஷ்டங்கள் எங்களுக்கு ஏற்பட்டிருக்காது என தெரிவிக்கின்றனர். அதேநேரம் அதிகாரிகளோ, “நிரந்தர கட்டடம் இல்லாத பகுதிகளுக்கு கொள்முதல் நிலையம் திறக்க இயலாது” என்று கூறுகின்றனர். நிரந்தர கட்டடம் கட்டிகொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் விவசாயிகள் கொடுப்பார்கள் என்று விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.