கனடா பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற 17 இந்திய வம்சாவளியினர். அபார வெற்றிபெற்று வரலாற்று முத்திரை!
டொரன்டோ: கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17 பேர் அபார வெற்றி பெற்றுள்ளனர்.
வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடாவின் பிரதமராக 2015 முதல் ஜஸ்டின் ட்ரூட்டோ உள்ளார். இவர், தன் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்தினார். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் லிபரல் கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளன. காமன்ஸ் சபையில் பெரும்பான்மை பெற இன்னும் 14 இடங்கள் தேவை. எனினும் தற்போதைய கூட்டணியே தொடரும் என்பதால் லிபரல் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இந்த பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் அபார வெற்றி பெற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங், 40 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அரசில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஹர்ஜித் சாஜன், அனிதா ஆனந்த், பர்திஷ் சக்கர் ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கனடா பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூட்டோ மீண்டும் வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் ஜன்டிஸ் ட்ரூட்டோவிற்கு வாழ்த்துகள். இந்தியா கனடா இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பல தரப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.