கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி முனியப்பனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரையும் அவரது மனைவியையும் தாக்கி அவரது மனைவி கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து வேப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த 19ஆம் தேதி இருவரை பிடித்து வேப்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த ரமேஷ் மனைவி பிரேமலதா(29), அவரது உறவினர் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன்(29) எனத் தெரியவந்தது.
மணிகண்டன், வேப்பூரில் தங்கி கடை ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். ஜூன் மாதம் தம்பி திருமணத்திற்காக தஞ்சாவூர் பகுதியிலிருந்து பிரேமலதா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் வந்துள்ளனர். திருமணத்திற்கு வந்த இடத்தில் ரமேஷ் அவரது மனைவி பிரேமலதா, மணிகண்டன் ஆகிய 3 பேரும் முனியப்பன் வீட்டில் திருடுவதற்கு நோட்டமிட்டனர். திட்டமிட்டபடி ஜூன் மாதம் 29 ஆம் தேதி இரவு மணிகண்டன் ரமேஷ் ஆகியோர் முனியப்பன் வீட்டிற்குள் புகுந்து அவர்களை தாக்கி அவரது மனைவி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துச் சென்றனர்.