0 0
Read Time:5 Minute, 39 Second

கருவின் பாலினத்தை தெரியப்படுத்தி கருக்கலைப்பு செய்ததற்காக தமிழ் நாட்டில் முதல் முறையாக மருத்துவர் தண்டனை பெற்றுள்ளார். 

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தி பெண் குழந்தையை கருக்கலைப்பு செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு முதல் முறையாக ஒரு மருத்துவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நெய்வேலியை சேர்ந்த 74 வயது மருத்துவர் ராமச்சந்திரன். அவர் மகாலாஷ்மி நர்சிங் ஹோம் நடத்தி வந்தார். அங்கு கர்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டத்துக்கு புறம்பாக தெரியப்படுத்தி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தால் கருக்கலைப்பும் செய்து வந்துள்ளார்.

2014ம் ஆண்டு இவர் குறித்த தகவல் சுகாதாரத்துறைக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து ஊரக மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் பாலினத்தேர்வு தடைச் சட்ட அமலாக்க குழு இணை இயக்குநர் கோவிந்தராஜன், அலுவலக மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர் மகாலஷ்மி நர்சிங் ஹோமில் திடீர் ஆய்வு நடத்தியது.

ஆய்வின் போது கருக்கலைப்பு செய்யப்பட்டிருந்த பெண், குழுவினரால் கண்டறியப்பட்டதால் மருத்துவர் ராமச்சந்திரன் கையும் களவுமாக பிடிப்பட்டார். பாலினத்தை அறிய பயன்படுத்திய ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்புக்கு தேவையான கருவிகள் ஆகியவற்றை கைப்பற்றியதோடு அங்கிருந்த பெண்ணிடம் வாக்குமூலத்தையும் அதிகாரிகள் பெற்றனர்.

இந்த ஆதாரங்களை கொண்டு 2014ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நெய்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு அவருக்கு அளித்த தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்த வழக்கை தொடுத்த விருத்தாசலம் தலைமை மருத்துவ அலுவலராக இருந்த மருத்துவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த இந்த வழக்கை நெய்வேலி நீதிமன்றத்தில் வாதாடிய அரசு வழக்கறிஞர் ஜான்சி ராணி கூறுகையில், ’இது போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையாக உள்ளது. இது மிகவும் குறைவாகும். இந்த வழக்கின் தீர்ப்பு பெண் சமூகத்துக்கே மிக முக்கிய தீர்ப்பாகும்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து பாலினத்தேர்வு தடைச் சட்ட அமலாக்க குழுவின் தலைவர் மற்றும் ஊரக மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநர் குருநாதன் நியூஸ்18க்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ‘முதல் முறையாக ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு பாலினத்தேர்வு தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும். கடலூர் மாவட்டத்தில் 2014ம் ஆண்டு 846 என இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் தற்போது 931 என உயந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மருத்துவர் செயல்பட்டு வந்த கம்மாபுரம் பகுதியில் தற்போது 1019 என பெண் குழந்தை பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 106 பெண் குழந்தைகள், 104 ஆண் குழந்தைகள் அங்கு பிறந்துள்ளன. இதே போன்று குற்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவர்கள் அல்லாதவர்கள் மீது சேலம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்தி அது குறித்தான வழக்குகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார். பெண்கள் குழந்தைகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என ஊரக மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

source: news 18

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %