தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்தகட்ட வேலையான தேர்தல் பரப்புரைக்குத் தயாராகிவருகின்றன. அதிமுக சார்பில் நேற்று (23.09.2021) திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே அதிமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனின் ஆதரவாளர்களும், அதிமுக மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனின் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும்போது மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.