மயிலாடுதுறை: கோயில் நகைகளை கொள்ளையடிக்க திட்டமா..?. இந்து மக்கள் கட்சி கண்டனம். இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் அறிக்கை!.
இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இந்து திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத
தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றப்படும் எனவும் அவை வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து வரும் வட்டியின் மூலம் கோயில்களில் திருப்பணி செய்யப்படும் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த முடிவு பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கோவில் திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலமாகவே செய்யப்படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கவேண்டிய அவசியம் இல்லை. கோவில் நகைகளை உருக்குவதை, அடகு வைப்பதை கெட்ட செயலாக பார்க்கிறோம். பக்தர்கள் நேர்த்திகடனாக செலுத்திய நகைகளை உருக்குவது, அடகு வைப்பது இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதுடன், உணர்வுகளை புண்படுத்துகிறது. கோவில் நகைகள் கலைநுட்பம் வாய்ந்தவை . தெய்வத்தன்மையுடையவை.
உபயோகபடுத்தப்படாத நகைகள் என யார் அடையாளம் காட்டுவது..?. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் முடிவு செய்வார்களா..? இவ்வாறு செய்வது ஊழலுக்குவழிவகுக்காதா..? அரசின் இந்த முயற்சியை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
கோயில் நகைகளை உருக்கி வைப்புநிதியாக வைக்க முயலும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.