மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட உளுத்துக்குப்பை ஊராட்சி மயிலாடுதுறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சீர்காழி நகராட்சி பகுதியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
இவ்வாய்வின்போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மூன்றாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மிகசிறப்பாக நடைபெற்று வருகிறது. இம்முகாம்களின் மூலம் 20 ஆயிரம் மையங்கள், 15 லட்சம் இலக்கு என்கின்ற வகையில் இம்முகாம்கள் தொடங்கப்பட்டது. அனைத்து முகாம்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அந்தவகையில் இதுவரை 15 லட்சம் இலக்கு என்பதை கடந்து 18 லட்சத்து 76 ஆயிரம் நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற முதல் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள், 20 லட்சம் நபர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரம். அதேபோல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 20 ஆயிரம் மையங்கள், 15 லட்சம் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த இலக்கை கடந்து 16 லட்சத்து 43 ஆயிரம் நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு சென்றுள்ளனர்.
இந்தவாரம் தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள், 15 லட்சம் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது, இதுவரை 18 லட்சத்து 76 ஆயிரம் நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. நிச்சயம் லட்சத்தை கடந்து 20 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து மகத்தான சாதனை படைக்கும்.
ஏற்கனவே தமிகழத்தில் 56 சதவீதம் நபர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டுக்கொண்டுள்ளனர். நிச்சயம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம்களுக்கு பிறகு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தை நெருங்கும்.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 லட்சத்து 61 ஆயிரத்து 320. இதில் சனிக்கிழமை வரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 432 நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 712 நபர்கள். கடந்த 12 -ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 42 ஆயிரத்து 473 நபர்களும், கடந்த 19 -ஆம் தேதி நடைபெற்ற 2-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 27 ஆயிரத்து 305 நபர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுச் கொண்டுள்ளனர்.
இதில் 4729 கர்ப்பணி தாய்மார்கள், 2890 பாலூட்டும் தாய்மார்கள், 2411 மாற்றுத்திறனாளிகள்,
47 திருநங்கைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 504 முகாம்கள் மூலம் 53 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறப்பாக நடைபெறும் இம்முகாமில் இலக்கையும் கடந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசால் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மக்களும் தடுப்பூசி முகாம்கள் மூலம் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை பூர்த்தி செய்த மாவட்டத்தின் 3 வட்டாரங்களை சேர்ந்த கிராமங்களில், சிறப்பாக பணியாற்றியமைக்காக 13 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாண்புமிகு அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மையத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி மங்கை சங்கர், இணை இயக்குநர்(சுகாதாரத்துறை) விஜயலெட்சுமி, துணை இயக்குநர் (சுகாதாரத்துறை) மருத்துவர் பிரதாப், நாகை- மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட தலைமை மருத்துவர் மகேந்திரன் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.