நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி தில்லியில் தொடா்போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தில்லி எல்லைகளில் கடுமையான வாகன சோதனைகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தில்லி – குருகிராம் நெடுஞ்சாலை உள்பட தில்லி எல்லைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் பல மணிநேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டுள்ளன.