தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், போரூர் பாய்கடை அருகில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி அவர் பேசிய தாவது:
மக்கள் சேவை செய்ய அரசியலுக்கு வருபவர்களுக்கும், மக்களை ஆள வருபவர்களுக்கும் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. எஜமானர்கள் வேண்டுமா அல்லது சேவை செய்யும் சேவகர்கள் வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
திமுக, அதிமுக என மக்கள்மாற்றிமாற்றி வாக்களித்து வருகின்றனர். அதே முதலாளிகள் தான் மாறி மாறி வருகின்றனர். இதில் இருந்து மாறத் தான் முயற்சி எடுத்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் பொது நோக்கம் உள்ளவர்கள் வந்துவிட கூடாது என்ற பயம் வியாபாரிகளுக்கு இருக்கிறது. இந்த புதை மண்ணில் இருந்து விடுபட அடையாளம் தெரிந்த நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்த மாதிரி தேர்ந்தெடுத்தவர்கள் பணியாற்றாவிட்டால் உங்களுடைய முதல்வனாக நின்று நானேஇந்த வேட்பாளர்களை நீக்கி விடுவேன். இது அமைதியாக நடக்கும் புரட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, பரணி புதூர், படப்பை உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.