சிதம்பரம் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள காடுகளில் படகு சவாரி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். இந்நிலையில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று (28.09.2021) இரவு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திடீர் ஆய்வு செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுடன் சுற்றுலாத்துறை இயக்குநர் சந்திப் நந்தூரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட வன அலுவலர் செல்வம், கிள்ளை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சுற்றுலா மையத்திற்கு வந்த அமைச்சர் மதிவேந்தன், டிக்கெட் கொடுக்கும் இடம், படகு குழாம், சுற்றுலா வளாகம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பிச்சாவரம் சுற்றுலா மையம் செயல்படும் விதம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
குறிப்பாகப் படகு குழாமில் கூடுதலாகப் படகுகள் அமைக்க வேண்டும் என்றும், மாலை நேரத்தில் பயணிகள் படகு சவாரி செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனவும், பயணிகள் ஓய்வு அறை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட அமைச்சர் மதிவேந்தன், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் அமைச்சர் மதிவேந்தன் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகில் சென்று ஆய்வு செய்துள்ளார்.