0 0
Read Time:2 Minute, 49 Second

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 34), விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடை செய்தார். அவ்வாறு அறுவடை செய்த 250 நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக கடலூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த பருவகால பட்டியல் எழுத்தர் (பில் கலெக்டர்) பாலமுருகனை (40) ஆனந்தன் அணுகினார். அதற்கு பாலமுருகன், ஒரு மூட்டைக்கு ரூ.60 வீதம் 250 மூட்டைகளுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தந்தால் தான், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வோம் என்று கறாராக கூறியதாக தெரிகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தன், இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி ஆனந்தன், ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று ஆலப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த பாலமுருகனிடம், நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக கூறினார். உடனே அவர், சுமை தூக்கும் தொழிலாளி கலைமணி (37) மூலமாக அந்த லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மெல்வின் சிங் தலைமையிலான போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், கலைமணி ஆகியோரை கைது செய்தனர்.  நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்காக விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %