0 0
Read Time:6 Minute, 15 Second

“கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான்” -பிரியங்கா காந்தி

பாஜகவினரால் கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் அவரது மகன் ஆஷிஷ் கைது செய்யப்பட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க கடந்த 3ஆம் தேதி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை இரு தினங்களுக்கு முன்பு சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியைக் கைது செய்த உத்தரப் பிரதேச காவல்துறையினர் சிதாப்பூர் பகுதியிலேயே 40 மணி நேரமாக வைத்திருந்தனர். இந்தநிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு உத்தரப் பிரதேசத்துக்கு வந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ வந்தடைந்த ராகுல் காந்தி விமானநிலையத்துக்கு விட்டு வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதனையடுத்து, அவர் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தைச் சந்திக்க உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதியளித்தது. அதனையடுத்து, இரவு பத்து மணி அளவில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் தெரிவித்தனர்.

குடும்பத்தினரைக் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தனர். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நீதி கிடைக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர் ராமன் காஷ்யப்பின் வீட்டை விட்டு வெளியேறும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ராகுல் காந்தி கோரினார்: “அரசியலமைப்பு மதிப்புகள் மீறப்படுகின்றன” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் மூன்று குடும்பங்களை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, வியாழக்கிழமை மீதமுள்ள குடும்பங்களை சந்திக்க வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இன்று நாங்கள் சந்தித்த மூன்று குடும்பங்களுக்கும் பணம் கொடுத்து இழப்பீட்டை சரி செய்ய முடியாது. அவர்கள் எதிர்பார்ப்பது பணமல்ல நீதியும் நியாயமும் வேண்டும்.

மூவரின் குடும்பத்திற்கும் நீதி வேண்டும், அதாவது அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் கைது. காவல்துறையினர் வாரண்ட் எதுவும் இல்லாமல் என்னை தடுத்து கைது செய்தனர். அதே நேரத்தில் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்வதில் இருந்து தடுப்பது என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

Source: ThatsTamil

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %