தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 5ம் தேதி காலை 4 மணியில் இருந்து வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சீராய்வு கூட்டம் நடத்தினார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல், விரைவில் வரவுள்ள பண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து திங்கட்கிழமைகளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதேபோல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசிக்கப்பட்டது. அதில், தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் கற்றல் இடைவெளி ஏற்பட்டிருப்பதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.