தமிழ்நாட்டில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்காக கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்கக் கோரி பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற 12 கோயில்களின் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜகவைச் சேர்ந்த மகளிர் அணியினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், கருப்பு முருகானந்தமும் தஞ்சை பெரியகோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம் உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் 700 பேர் மீது கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய பாஜகவின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.