கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிரமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்ததாஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறுநாள் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
source:puthiyathalaimurai