மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,46,937 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மேலும் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்தார். இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 9,81,082 மொத்த மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 7,61,320 நபர்கள் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி 4,14,991 நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1,46,937 நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த சூழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை 506 இடங்களில் நடைபெறவுள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 4 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, அதன்மூலம் 1,27,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சிகளில் 420 இடங்களிலும், பேரூராட்சிகளில் 15 இடங்களிலும், நகராட்சிகளில் 19 இடங்களிலும், 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 6 அரசு மருத்துவமனைகளிலும், 15 நடமாடும் கொரோனா வைரஸ் தடுப்பூசி குழுக்கள் என மொத்தம் 506 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. இதனை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.