கோயம்புத்தூர் மாவட்டம் குருடம்பாளையத்தில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார். அவருக்கு அவருடைய குடும்பத்தினரே வாக்களிக்காதது ஏன் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் குருடம்பாளைய ஊராட்சி 9வது வார்டுக்கான இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஊராட்சி வார்டுக்கான தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் அல்லாமல் சுயேச்சை சின்னத்தின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதன்படி, கட்டில் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த ஆ. அருள்ராஜ் 387 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும் வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் கந்தேஷ் 84 வாக்குகளும் ரவிக்குமார் என்பவர் 2 வாக்குகளையும் பெற்றனர். மேலும், தீ. கார்த்திக் என்பவர் கார் சின்னத்தில் போட்டியிட்டு ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார்.
இந்த கார்த்திக் கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த வார்டுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டர் தளத்தில் இது குறித்து பெரிய அளவில் கேலிசெய்யப்பட்டு வருகிறது. இதனை கேலி செய்யு #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_vote_BJP என இரண்டு ஹாஷ்டாகுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.
#ஒத்த_ஓட்டு_பாஜக ஹாஷ்டாகில் கிட்டத்தட்ட 20,000 ட்வீட்களும் #Single_vote_BJP சுமார் 9 ஆயிரம் ட்வீட்களும் இதுவரை திரட்டப்பட்டுள்ளன. #ஒத்த_ஓட்டு_பாஜக தற்போது அகில இந்திய அளவில் ட்ரென்ட் ஆகிவருகிறது.
இந்தத் ட்வீட்களில் பெரும்பாலானோர், கார்த்திக்கின் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட அவருக்கு வாக்களிக்காதது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது குறித்து விசாரித்தபோது, கார்த்திக் 9வது வார்டில் போட்டியிட்டாலும் அவர் குடியிருப்பது 4வது வார்டில் எனத் தெரியவந்திருக்கிறது. இதனால், அவரோ, அவரது குடும்பத்தினரோ 9வது வார்டில் வாக்களிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்துள்ளது. இந்த ஒரு ஓட்டை போட்டது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் அவ்வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவ்வார்டு அடங்கியுள்ள உள்ளாட்சி பகுதியில் வசிப்பவராகவும், அவ்வுள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் தம் பெயர் இடம் பெற்றுள்ளவராகவும் இருத்தல் அவசியம். அதன்படியே, கார்த்திக் நான்காவது வார்டில் வசித்தாலும் ஒன்பதாம் வார்டு தேர்தலில் போட்டியிட்டார்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தலைப் பொறுத்தவரை, அவை கட்சியின் அடிப்படையில் போட்டியிடப்படுவதில்லை. மாறாக, அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சை என்ற அடிப்படையிலேயே தேர்தல்களைச் சந்திப்பார்கள். அவர்களுக்கு சுயேச்சைகளுக்கான சின்னமே தரப்படும்.
ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது இந்த வேட்பாளர்கள் தாங்கள் எந்தக் கட்சி என்பதை முன்னிறுத்தியே பிரசாரம் செய்வது வழக்கமாக இருக்கிறது. அதன்படியே கார்த்திக் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் என்பது அவரது கட்சி அடையாளமாக முன்வைக்கப்படுகிறது.
இது தவிர, வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும்போது அவர்கள் சுயேச்சைகள் என்று சொல்வதையும் வெற்றிபெறும்போது, அவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதையும் வழக்கமாக வைத்துள்ளன.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களைத் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் 50 இடங்களைத் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. மூன்று இடங்களை அ.தி.மு.கவும் தலா ஒரு இடத்தை சி.பி.ஐ., சி.பி.எம்மும் காங்கிரசும் கைப்பற்றியுள்ளனர். இதுதவிர, 150க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 3 இடங்களையும் தி.மு.கவே கைப்பற்றியுள்ளது. 60க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. நான்கு இடங்களில் முன்னிலையில் உள்ளது.
source: bbc