கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சிவகுமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 28 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல் 8-வது தெருவில் வசித்து வரும் ஞானப்பிரகாசம் மனைவி அந்தோணிமேரி(65) என்பவருடைய வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தையும் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த 2 வீடுகளிலும் கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். மேலும் என்.எல்.சி. ஆபீசர் நகரில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி மனைவி சாந்தா என்பவருடைய வீடு மற்றும் அதே தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் மர்மநபர்கள் திருட முயன்றனர். அப்போது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் கொள்ளை நடந்த வீடுகள் மற்றும் திருட்டு முயற்சி நடந்த வீடுகளை பார்வையிட்டு, அங்கு பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து 4 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை, திருட்டு முயற்சி சம்பவங்களால் வடலூர் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
Read Time:2 Minute, 57 Second