தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் பயிா்களை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும், 21 சதவீதம் ஈரப் பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை பணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும், சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை காவிரி ஆணையத்திடமிருந்து பெற்று கடைமடை பகுதி வரை தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், நிவா், புரவி புயல், தொடா் மழையால் பாதிக்கப்பட்டு விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், மூா்த்தி, விவசாயத் தொழிலாளா்கள் சங்க துணைத் தலைவா் செல்லையா, விவசாய சங்க நிா்வாகிகள் காளி கோவிந்தராஜன், கொளஞ்சியப்பன், தா்மதுரை, ஜாகிா் உசேன், வாசுதேவன், பாண்டுரங்கன், மாயவேல், ஜீவா முத்துக்குமரன், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் கண்ணன், காஜாமொய்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.