விருத்தாசலம் அருகே உள்ள ஏனாதிமேடு கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு அதே கிராமத்தை சேர்ந்த கவியரசன் (வயது 27) என்பவர், அடிக்கடி வந்து ஓசிக்கு மதுபாட்டில்கள் கேட்பதும், அவரை ஊழியர்கள் திட்டி அனுப்பி வைப்பதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினமும் கவியரசன், டாஸ்மாக் கடைக்கு ஓசிக்கு மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், மதுபாட்டில் தர மறுத்த ஊழியர்களை ஆபாசமாக திட்டியதோடு, அவர்களை கடைக்கு உள்ளேயே வைத்து ஷட்டரை இழுத்து பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையின் ஷட்டரை திறந்து டாஸ்மாக் கடை ஊழியர்களை மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கவியரசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read Time:1 Minute, 36 Second