கடலூரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும் என்று டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் 2003ஆம் ஆண்டு புதுக்கூரை பேட்டையைச் சேர்ந்த மருது பாண்டியின் தங்கை கண்ணகியை பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, 2003 ஜூலை 8 தேதி முருகேசன், கண்ணகி தம்பதியர் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். சுமார் 15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை கடலூர் நீதிமன்றம் கடந்த மாதம் செப்டம்பர் 24-ஆம் தேதி வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், ‘ஒருவருக்கு தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் குப்பநத்தம் கிராமத்தில் வசித்து வந்த முருகேசனின் தாய் சின்னப்பிள்ளை கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் தன் வீட்டின் வாசலில் இருந்த பொழுது சில நபர்களால் தாக்கப்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதையடுத்து 15ஆம் தேதி விருதாச்சலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சாமிக்கண்ணு மனைவி சின்னப்பிள்ளையிடம் விருதாச்சலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆதி வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் வழக்கு செய்ய வழக்குப்பதிவு செய்தார்.
இதில் சின்னப்பிள்ளையை புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, வரதராசு, பாக்கியராஜ், சதீஷ்குமார், வெங்கடேசன், ராஜீவ் காந்தி, வினோத்குமார் ஆகியோர் தன்னை தகாத வார்த்தையால் திட்டியும் கம்பால் அடித்தும் எட்டி உதைத்தும் தாக்கியதாக வாக்குமூலம் அளித்தார். இதனடிப்படையில் ஆறு பிரிவுகளில் 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுவரை இதுசம்பந்தமாக குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் கண்ணகி முருகேசன் வழக்கை நடத்தி வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் இவ்வழக்கு சம்பந்தமாக உடனடியாக விசாரணை நடத்தி சின்னப்பிள்ளையை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மனு ஒன்றை அளித்துள்ளார்.
source: news18