அரசு பொது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு விலையில்லா மருந்துகள் வழங்கப்படுகிறது. மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப மருந்துகள் கொடுப்பதற்கு என்று தனி வரிசை உள்ளது. ஒரே நோயாளிக்கே மூன்று அல்லது நான்கு விதமான மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
காலை உணவிற்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரை, மதியம் சாப்பிட வேண்டிய மாத்திரை, இரவு நேரங்களில் சாப்பிட வேண்டிய மாத்திரை என்று தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் இதுபோல் வழங்கும் பொழுது ஒரு கவரில் மாலை, இரவு, மதியம் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டியவை அல்லது ஆகாரத்திற்கு பின் சாப்பிட வேண்டியவை என்பது குறித்து தெளிவாக குறிப்பு எழுதி அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் அரசு மருத்துவமனைகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான மாத்திரைகள் அனைத்தும் அப்படியே கையில் கொடுக்கப்படுகின்றன. வயதானவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சிரமப்படும் நோயாளிகள் எந்த மாத்திரை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்ற குறிப்பு ஞாபகம் இல்லாததால், தடுமாற்றத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.
இதனால் மருந்து சாப்பிடும் நேரம் அல்லது அளவு மாறிப்போய் பக்கவிளைவுகள் ஏற்படும் நிலைமை ஏற்படுகிறது. காலை மாலை என்று குறிப்பிடப்பட்ட கவர்களை தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.