மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்ததாவது.
மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையானது முதன்மை கூட்டுறவுசங்கமாக செயல்பட்டு மாவட்டத்தில் 410 நியாயவிலைக்கடைகளுக்கு அத்தியவாசிய பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நகர்வு செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பண்டகசாலை மூலம் 4 கூட்டுறவு மருந்தகம் மற்றும் 1 அம்மா மருந்தகம் மாவட்டத்தில் இயங்கிவருகிறது. மருந்தகங்களில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கழிவுடன் பொதுமக்களுக்கு மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலம் மயிலாடுதுறை நாராயணப்பிள்ளை தெரு, மயிலாடுதுறை பிஎஸ்என்எல் கட்டிடம், கூறைநாடு, காவேரிநகர், குத்தாலம், செம்பனார்கோயில், சீர்காழி உள்ளிட்ட 7 இடங்களில் தீபாவளி பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு இந்த கூட்டுறவு பண்டகசாலையின் மூலம் ரூ.140 லட்சத்திற்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.150 லட்சத்திற்கு பட்டாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.நடராஜன், மயிலாடுதுறை சரக துணைப்பதிவாளர் த.ராஜேந்திரன், மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் இரா.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.