0 0
Read Time:3 Minute, 2 Second

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் 15.11.2021 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

”தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.658, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் இன்று (23-10-2021 ) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %