விருதுநகர் : நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் தமிழ்நாடு என்ற மாநிலம் உருவான நாள் . இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும். தமிழகத்திற்கு என தனிக்கொடி அறிவிக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறத்தி உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.
பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி மாநிலங்கள். மாநிலங்களை மொழிவாரியாக பிரிக்க வேண்டும் என்று கோரிஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் ஈந்ததை அடுத்து, 1953-ல் ஆந்திரா என்ற தனி மாநிலம், தெலுங்கு பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் மக்கள் வைத்த கோரிக்கையால், 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பல உருவாயின. நவம்பர் 1, 1956 அன்று சென்னை மாகாணத்துடன் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன. தமிழ் அதிகம் பேசும் பகுதிகள் மெட்ராஸ் மாகாணம் ஆக நவம்பர் 1ம் தேதி உருவெடுத்தது.
சட்டமன்ற தீர்மானம்
இந்நிலையியில் 1967ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று முதல் ‘தமிழ்நாடு’ எனும் பெயர் தான் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.
விசிக கண்டிக்கிறது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
கொலை வழக்கு
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட ராஜ்கிரன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்யக்கூடிய சிங்கள கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல்
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது . திமுகவின் நான்கு மாத கால ஆட்சி அனைவருக்குமான நல்லாட்சியாக விளங்குகிறது. அதற்கு அத்தாட்சியாக தான் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர்.
தனிக்கொடி
நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி அடிப்படையில் மாநிலம் பிரிந்த நாள் . இந்த ஆண்டு முதல் தமிழக அரசு இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும். தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்கவேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும். சங்கரலிங்கனார் நினைவை போற்றும் விதமாக அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவர் பெயரில் விருது வழங்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Source:ThatsTamil