கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே 21 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். மேலும் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண், குறிஞ்சிப்பாடி ரோட்டு மருவாய் பகுதியை சேர்ந்த 36 வயது ஆண், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலியாகி உள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே உள்ள ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் தருண்(வயது 17). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தருண், சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் தருணுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் தருண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மீரா உத்தரவின் பேரில் ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பொதுமக்கள் யாருக்கும் சளி, காய்ச்சல் உள்ளதா? என தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொசுப்புழு ஒழிப்பு பணி, கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், ஆராய்ச்சிக்குப்பத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ முகாமை பார்வையிட்டார். பின்னர் அவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், கொசுப்புழுவை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவினரை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, குமரன், மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர், அறிவொளி, விஜயராகவன், ஊராட்சி செயலாளர் நடராஜன், பழனிவேல் மணிவாசகம், மணிகண்டன், கணேசன், சுரேஷ், பாண்டியராஜன், வேலாயுதம், தேவேந்திரன், தட்சிணாமூர்த்தி, தாமோதரன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Read Time:3 Minute, 58 Second