0 0
Read Time:4 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா, நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளை நிர்வாகி சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர்கள் அருள்மொழி, கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் சுதாகர் வரவேற்று பேசினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை இளைஞர் நலம் விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மரங்களை நடுவது முக்கியமல்ல அதற்கு நீர் ஊற்றுவது தான் முக்கியம். கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது மாவட்டத்தில் 2 ஆயிரம் பனை விதைகளை நட்டு வைத்துள்ளேன். அது எனக்கு மன நிறைவை தருகிறது. தமிழகத்தில் 22 சதவீதம் காடுகள் உள்ளன. இதில் எத்தனை சதவீதம் மரங்கள் உள்ளது என்பது குறித்து சேட்டிலைட் மூலம் புகைப்படம் எடுக்கபட உள்ளது. மரக்கன்றுகள் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 150 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதற்கு நாம் யாருக்கும் பணம் தருவது இல்லை. ஆனால் மரங்கள் நமக்கு ஆக்சிஜனை கொடையாக வழங்கி வருகிறது.தமிழகத்தில் 7 கோடிக்கு மேல் மக்கள்தொகை உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு இரண்டு மரங்கள் தேவையான ஆக்சிஜனை வழங்கி வருகிறது. தமிழக மக்களுக்கு 23 கோடி மதிப்புள்ள ஆக்சிஜனை நமக்கு மரங்கள் வழங்கி வருகிறது. எனவே மரக்கன்றுகளை நட்டு மண் வளத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், ரவிக்குமார், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி கருமுத்து நன்றி கூறினார்.முன்னதாக வீரத்தமிழர் சிலம்பாட்ட குழு சார்பில் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அகனி, சொக்கன்குளம் ஆகிய பகுதிகளில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %