கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்பு திறக்கப்படாமல் இருந்தன நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் காடம்பாடி அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும், ரோஜா பூ மற்றும் இனிப்புகள் வழங்கியும் மங்கள வாத்தியம் முழங்க மாவட்ட ஆட்சியர் வரவேற்றார். மேலும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வகுப்பறைகள் இருக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கான குடிநீர் கழிவறை வசதி களையும் பார்வையிட்ட அவர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நாகை மாவட்டத்தில் 270 அரசு துவக்கப்பள்ளிகள் , 85 நடுநிலைப்பள்ளிகள், 126 உதவி பெறும் பள்ளிகள், 75 தனியார் பள்ளிகள், 144 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என 700 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது இதில் 73534 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். முன்னதாக காலை முதலே ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை உடற்சூடு பரிசோதனை செய்தும் கிருமிநாசினி வழங்கியும் முக கவசம் இல்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முக கவசம் அணிவித்து பள்ளிகளில் அனுமதித்தனர்.
அப்போது பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து எடுத்து வந்த சிங்கம், புலி, குரங்கு உள்ளிட்ட முகமூடிகளை அணிந்து கொண்டு பள்ளி நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடல் ஆடல் முறையில் சமூக சிந்தனை, பொது அறிவு, விளையாட்டு உள்ளிட்ட பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்தனர்.அங்கு செய்தியாளர்களை சந்தித்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பேட்டியின் போது இன்று நாகை மாவட்டத்தில் 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளியின் முகப்பில் திருவிழா போல் வாழைமரம், பலூன்கள் கட்டி உற்சாகமாக மாணவர்களை வரவேற்றனர். பள்ளிகளில் கடந்த 15 நாட்களாக சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. கழிவறைகள் சுத்தம் செய்வது சுகாதாரமான குடிநீர் வழங்குவது சம்பந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு மதிய உணவிற்கு புதிய பாத்திரங்கள் உணவு பொருட்கள் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை அன்பாக அணுக வேண்டும், 15 முதல் 20 நாட்கள் வரை பாட்டு, விளையாட்டு போன்ற ஊக்கமளிக்கும் வகையில் சுவாரஸ்யமாக வரவேற்கும் பள்ளியாக இருக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.